தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று கரூர் புறப்பட்டார். சாலை வழியாகச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய அவர், “ஒருவன் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது; எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது; நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான்; இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?

நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அதுமட்டும் போதாது மக்களே… எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ’பேசு… பேசு’ என்று சொல்கிறார்கள்; ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள்; PARTY FUND என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள். நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனிவரும் தலைமுறைக்குத் தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
அன்றைக்கும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். நாளைக்கும் சொல்வேன்.. தில்லா சொல்வேன்… கெத்தா சொல்வேன். பணமா ஜனமா? அப்படி கேட்டால், என் ஜனம்தான் எனக்கு முக்கியம். இப்போ நான் சொன்னதெல்லாம் ஒரு சாம்பிள்தான்; இனிமேதான் அரசோட விஸ்வரூபத்தை நீங்க பார்ப்பீங்க.. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது; ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது ரொம்ப சந்தோசம். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனச் சொல்லுங்கள் நான் இருக்கிறேன்.
‘டாக் லெஸ், ஒர்க் மோர்’ என்பதே நமது அரசியல்; ‘பேச்சை குறை, வேலையை செய்’ இதுவே எங்கள் கொள்கை. கட்சி நிதி என்ற பெயரில் தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி கொள்ளை அடிக்கிறது. பேரவையில் ‘கட்சி நிதி’ என்று எந்த கட்சியின் பெயரையும் நான் சொல்லவில்லை, ஆனால் ஒரே ஓட்டம்தான். அண்ணா பிறந்த நாளில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அறிவிக்கப்படும். இந்த விஜய், ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன். தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும் தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது; கூட்டுக் களவாணிகள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா?; இடைத் தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள்” என்றார்.
