இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில், மேலும் இரண்டு முக்கிய பவுலர்கள் காயத்தால் விலகியிருப்பது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அதிலும் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களில் சுருண்டு சாதனை படைத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதிலும், இந்திய கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், தனது 5 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறவில்லை. இதனால், அணி மீதும் அவர் மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்கிடையே, பிரிஸ்டலில் நேற்று நடைபெற்ற 4-ஆவது டி20 போட்டியில் இரு முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.

காயம் காரணமாக ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி விலகியதை அடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். ஹர்ஷித் ராணா சமீபத்தில்தான் முழங்கால் அறுவைச்சிகிச்சை முடிந்து சுமார் 150 நாட்களுக்குப் பிறகு அயர்லாந்து டி20 தொடரில் அணிக்கு திரும்பியிருந்தார். அவர் ஜூலை 14 முதல் தொடங்கவுள்ள ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளதால், அதற்குள் அவர் குணமடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, முந்தைய காயத்தால் அயர்லாந்து டி20 தொடரை தவறவிட்டு இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்பிய வருண் சக்கரவர்த்தி மீண்டும் காயமடைந்திருக்கிறார். ஏற்கெனவே இந்தியா அணியின் தோல்வி குறித்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அணியின் முக்கியப் பந்துவீச்சாளர்கள் காயமடைந்து விலகியிருப்பது இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
