இனிமேலாவது சரியாகச் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, கட்சியில் ஆர்வமாக, திறமையாகச் செயல்படுபவர்களுக்குப் பதவி கொடுங்கள்.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்கும் அளவுக்குத் திறமையானவர்கள் தேவை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல் ஆட்சிக்கு வந்தனர். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளின் உழைப்பின் அருமை தெரியாது; அவர்களின் கஷ்டம் தெரியாது. அதனால்தான் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சமூக வலைதளம் மூலமாகவே தங்களது கட்சியை வளர்த்தனர். நாமும் அதிமுக ஐ.டி.விங்கை மாநில அளவில், மண்டல அளவில், ஒன்றிய அளவில் என நிர்வாகிகள் நியமித்தோம். ஆனால், ஐ.டி. விங் நிர்வாகிகள் சரியாகச் செயல்படவில்லை. எனவே, இனிமேலாவது சரியாகச் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, கட்சியில் ஆர்வமாக, திறமையாகச் செயல்படுபவர்களுக்குப் பதவி கொடுங்கள்.

விஜய், எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, இனி இயக்கத்தின் வளர்ச்சிக்கு AI (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அளவிற்குத் திறமையான நபர்களுக்குக் கட்சிப் பதவி வழங்க வேண்டும். இந்தத் தோல்விக்கு ஐ.டி விங் மட்டும்தான் காரணம் என்று நினைக்காதீர்கள்; பிறசார்பு அணிகளும் சரியாகச் செயல்படவில்லை. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காகக் கட்சியைவிட்டு மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவரை அடையாளம்கண்டு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும், இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் கடுமையாகஉழைக்க வேண்டும்” என்றார்.
