இப்படத்திற்கு `ஏ’ சான்றிதழ் தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுமேயானால், விஜயின் கரியரில் முதன்முறை `ஏ’ சான்றிதழோடு வெளியாகும் படம் `ஜனநாயகன்’ தான்.
ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றித்தான் நேற்றிலிருந்து பேச்சுக்கள் எழுந்துள்ளன. முதலில் ஜனநாயகன் பட பிரச்னை தெரியாதவர்களுக்காக ஒரு குட்டி ஃபிளாஷ்பேக். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவான படம் ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அதனை எதிர்த்து CBFC தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது.

Jana Nayagan
கடைசியாக படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி சென்ற பின்னரும் சான்றிதழ் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் முழுவதும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாகவும் பல கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து நடிகர் விஜய், முதல்வர் விஜய் ஆகிவிட்டார். ஆனால் `ஜனநாயகன்’ படத்துக்கு மட்டும் எந்த விடிவும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் தான் நேற்றிலிருந்து ஜனநாயகன் வெளியீடு பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதன்படி `ஜனநாயகன்’ படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டது எனவும், படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கி, வசனங்களை ம்யூட் செய்ய கூறியுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு `ஏ’ சான்றிதழ் தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுமேயானால், விஜயின் கரியரில் முதன்முறை `ஏ’ சான்றிதழோடு வெளியாகும் படம் `ஜனநாயகன்’ தான். இந்த மாற்றங்களை செய்த பின்னர் ஓரிரு தினங்களில் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள். படத்தின் ரிலீஸ் சம்பந்தமாக தான் இன்னும் உறுதியான தகவல் ஏதும் முடிவாகவில்லை.

Jana Nayagan
ஒரு தரப்பினர் இப்படத்தை ஜூலை 16ம் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளனர், பெய்டு ப்ரீமியர் ஜூலை 15 இரவு இருக்கும், அதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டு படக்குழு பேசிவிட்டது எனவும் சொல்கிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் 16ம் தேதி இந்தப் படம் வர வாய்ப்பு மிகக் குறைவு, அதற்கு ஒரு முக்கிய காரணம் கிறிஸ்டோஃபர் நோலனின் `ஒடிசி’ படம் ஜூலை 17ம் தேதி வெளியாகிறது என்பதால் அது பெரிய அளவில் ஜனநாயகனுக்கான திரைகளை குறைக்கும். எனவே அந்த தேதி சரியாக வராது என்கிறார்கள்.
எனவே, ஜூலை 16 தவிர இன்னும் மூன்று தேதிகளில் ஜனநாயகன் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஜூலை 24 அல்லது ஜூலை 30 இந்த இரு தேதிகளில் வந்து விட படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படி இல்லை எனில் ஆகஸ்ட் 7ம் தேதி வரலாம் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ CBFC சான்றிதழ் வந்த உடன், அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் படக்குழுவிடமிருந்தே அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வர உள்ளது என சொல்லப்படுகிறது. அதன் பிறகு படத்தின் புதிய டிரெய்லர் கூட வெளியிடப்படலாம் எனவும் சொல்கிறார்கள். இது போக படத்தின் விஜயின் பெயரை தளபதி விஜய்க்கு பதிலாக முதலமைச்சர் விஜய் என போட முயற்சி நடக்கிறது எனவும் ஒரு தகவல் உலவுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம், முதல்வர் விஜய் இதற்கு சம்மதிப்பாரா என்பது எல்லாம் தெரியவில்லை.
