இந்தியாவுடன் 4,000 கிமீக்கும் அதிகமான நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் வங்கதேச மக்கள், கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில், 21 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
இந்தியாவுக்கு வருவதற்காக, வங்கதேசம் முழுவதும் விசா சேவை மையங்களில் நீண்ட வரிசையில் அந்நாட்டு மக்கள் காத்திருப்பது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வருகை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.
வங்கதேசத்தில், கடந்த 2024 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, தங்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தக்கோரி இந்துக்கள் அங்கு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விசா சேவை தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 1.40 லட்சத்திற்கும் அதிகமான விசா விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா சேவையைப் பெறுவதற்காக வங்கதேச தலைநகர் டாக்காவின் ‘ஜமுனா ஃபியூச்சர் பார்க்’ உட்பட டாக்கா, ராஜஷாஹி, சிட்டகாங், சில்ஹெட் மற்றும் குல்னா ஆகிய 5 முக்கிய மையங்களில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். அவர்கள், மலிவு விலையில் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும், திருமணப் பொருட்கள் வாங்குவதற்கும் அல்லது இந்தியாவில் உள்ள உறவினர்களைச் சந்திப்பதற்கும் இந்த விசா ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதையடுத்தே, விசா சேவை மையங்களில் கூட்டம் நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுடன் 4,000 கிமீக்கும் அதிகமான நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் வங்கதேச மக்கள், கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில், 21 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். இது மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20% ஆகும். இந்தியா வழங்கிய அனைத்து மருத்துவ விசாக்களில் 70-75% வங்காளதேசத்திற்கே வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பயணத் தடைக்குப் பிறகு, 2025-இல் இந்த எண்ணிக்கை 4,70,000 ஆகக் குறைந்தது.
அப்போது, வங்காளதேச மக்கள் சீனா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்தனர். எனினும், அது அவர்களுக்கு செலவை அதிகரித்தது. ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான வங்கதேச மக்கள், கொல்கத்தா, சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை மற்றும் குவஹாத்தியில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சைகளுக்காக இந்தியாவிற்குப் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வருகையின்மையால், கடந்த 2024-25இல் இந்திய வணிகம் ரூ.1000 கோடி இழப்பைச் சந்தித்தது கவனிக்கத்தக்கது.
