தவெகவை புகழ்ந்து திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என குற்றம்சாட்டிய வைகோ. கூட்டணியில் இருந்தபோது ஏன் பேசவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பவே வாக்குவாதம் தீவிரமடைந்தது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தனிச்சின்னம் வழங்காததால் திமுக மதிமுக இடையே உரசல் இருந்தது. தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தவெகவுக்கு ஆதரவாக வைகோவின் கருத்துக்கள் இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனால், திமுக ஆதரவாளர்கள் மதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவை கூட்டி முடிவெடுத்து அறிவித்திருந்தார் வைகோ. மேலும் கூட்டணியிலிருந்து வெளியே வந்தவுடன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

Vaiko & Vijay
தவெக ஆட்சியில் ஊழல் இல்லை, கமிஷன் கேட்பதில்லை போன்ற நல்ல விஷயங்களுக்காகவும், சமூக நீதியை பின்பற்றுவது, மும்மொழி கொள்கையை எதிர்ப்பது, பேரறிஞர் அண்ணா கொள்கையை பின்பற்றி வருவது போன்ற காரணங்களுக்காக மதிமுக ஆதரவு என்ற நிலை எடுத்ததாக வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்துள்ளார். அதற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், ”ஒரு சதுர அடிக்கு கமிஷன் வாங்கிய ஒரே கட்சி திமுகதான், லஞ்சம் ஊழலில் இருந்தது திமுக ஆட்சி தான். இவர் (முதலமைச்சர் விஜய்) ஒழிச்சிட்டாருல்ல இப்போ லஞ்சம் ஊழல் இல்லை” எனத் தெரிவித்தார்.
உடனே, செய்தியாளர் ஒருவர் இதை நீங்க கூட்டணியில் இருந்த போது ஏன் கூறவில்லை என்று கேட்ட கேள்விக்கு கூட்டணியில் இருந்துக் கொண்டே பேசுவது தர்மம் இல்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து வைகோவுக்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் நீடித்தது ஒரு கட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகள் சொல்லி பேசியதால் செய்தியாளர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதனை தவிர்க்கும் விதமாக காவல்துறை செய்தியாளர்களை தாக்க முயன்ற மதிமுக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி செய்தியாளர்களை வெளியேற்றினர்.
