அந்தப் படத்தில் ஏவிஎம்-மில் சூர்யோதய காட்சி எடுக்க வேண்டியதாக இருந்தது. தனுஷிடம் வந்துவிடுவாயா எனக் கேட்டேன், வந்துவிடுவேன் என்று கூறினார்.
பவிஷ், நாகதுர்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் `லவ் ஓ லவ்’. இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கஸ்தூரிராஜா “பவிஷை உருவாக்கியவர் தனுஷ். தனுஷின் வார்ப்பு தான் பவிஷ். நான் அவரை அறிமுகப்படுத்தினேன், அந்தப் படம் ஹிட்டானது. அடுத்தாக அவரை வைத்து `ட்ரீம்ஸ்’ என்ற படத்தை இயக்கினேன். ஏனென்றால் அறிமுகப்படுத்துவது மட்டும், வாய்ப்பு தருவது மட்டும் போதாது. தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தை முடித்த பின் தனுஷுக்கு நான் ஒரே அறிவுரை தான் கூறினேன். உன் இயக்குநரோ, தயாரிப்பாளரோ ஷாட் எடுக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் சொன்ன நேரத்துக்கு நீ சென்றுவிடு என்றேன். அதை இன்று வரை பின்பற்றுகிறார்.
அந்தப் படத்தில் ஏ.வி.எம்மில் சூர்யோதய காட்சி எடுக்க வேண்டியதாக இருந்தது. தனுஷிடம் வந்துவிடுவாயா எனக் கேட்டேன், வந்துவிடுவேன் என்று கூறினார். வீட்டுக்கு போனதும் அந்த திட்டம் மாறியது 10 மணிக்கு மேல் அந்தக் காட்சியை எடுப்பது என முடிவானது. அதை எல்லோரிடமும் கூறிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் தனுஷை காணோம். நான் சீக்கிரம் வர சொன்னேன் என்பதால், அவர் ஏவிஎம் லேயே தங்கிவிட்டார். அந்த ஒழுக்கம் உன்னிடமும் இருக்க வேண்டும் பவிஷ்.
என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல், பவிஷின் அம்மா விமலகீதா எனக்கு ஸ்பெஷல். முதல் மகன் செல்வராகவன், முதல் பேரன் பவிஷ் அந்த விதத்தில் இருவரும் எங்களுக்கு ஸ்பெஷல். இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறார். தனுஷும் அப்படி உழைத்தவர் தான். துள்ளுவதோ இளமை முடிந்ததும், காதல் கொண்டேன் படத்துக்காக செல்வராகவனிடம் தனுஷை ஒப்படைத்தோம். பின்னர் அந்த பொறுப்பை சுப்ரமணியம் சிவா எடுத்துக் கொண்டார். தனுஷை ஹீரோவாக வடிவமைத்ததே அவர் தான். மேலும் அவரை வளர்த்துக் கொண்டார். நீயும் அப்படி உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
