நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களின் மூலமான மகரந்தச் சேர்க்கையால் கிடைப்பது. ஆனால், காலநிலை மாற்றத்தால் தேனீக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, அதிக அளவில் பூக்கள் இருந்தாலே தேனீக்களுக்குப் போதுமானது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மனிதர்களைப் போலவே தேனீக்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. தற்போதைய காலநிலை மாற்றம், பூக்களில் உள்ள மகரந்தம் மற்றும் தேனின் ஊட்டச்சத்து அளவை பெருமளவில் மாற்றிவருகிறது. ‘கரன்ட் ஒப்பினியன் இன் இன்செக்ட் சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அனைத்து தேனீக்களையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை. தேன் கூடுகளாக, குழுக்களாக வாழும் தேனீக்கள் தங்களுக்குள் உணவைப் பகிர்ந்துகொள்வதாலும், சேமித்து வைப்பதாலும் இந்த ஊட்டச்சத்து தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்துவிடுகின்றன.

ஆனால், ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி தேனீக்கள் உட்பட, உலகில் உள்ள பெரும்பாலான தேனீக்கள் தனியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோதான் வாழ்கின்றன. இவற்றுக்குக் கூடுகளின் கூட்டுப் பாதுகாப்பு கிடையாது. இதனால், பூக்கள் பூக்கும் காலம் மாறினாலோ, ஊட்டச்சத்து குறைந்தாலோ, இந்தத் தனித்து வாழும் தேனீக்களின் இனப்பெருக்கம் மற்றும் உயிர்வாழும் திறன் உடனடியாகப் பாதிக்கப்பட்டு, அவற்றின் இனம் வேகமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நமது வீட்டுத் தோட்டங்களில் வெறும் பூச்செடிகளை மட்டும் வளர்க்காமல், பல்வேறு வகையான உள்ளூர் தாவரங்களை வளர்க்க வேண்டும். தேனீக்களைப் பாதுகாப்பதென்பது நம் உணவுப் பாதுகாப்பையும் நம் புவியையும் பாதுகாப்பதாகும்.
