சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், அந்தப் பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுகவில், பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமில்லாத பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. சட்டமன்றத்தில் தனிக்கட்சிபோல செயல்பட்டதுடன், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்தனர். இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், அந்தப் பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் திரும்ப வழங்காமலிருந்தார் கே.பழனிசாமி.
சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு பொறுப்பு வழங்கியிருக்கிறார் பழனிசாமி. எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியும், தங்கமணி, கருப்பணன், கே.பி.அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதில் அவர்களுக்கு திருப்தி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், கட்சியில் மாவட்டச் செயலர் பொறுப்புதான் அதிகாரம் மிக்கது. மாவட்டத்துக்குள் நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பரிந்துரை, மாவட்ட அளவில் போராட்டம் என்றால் தலைமை தாங்குவது போன்ற முக்கிய அதிகாரங்கள் உள்ளன.
ஆனால், அமைப்புச் செயலருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அதிமுகவில் 60 பேருக்கு மேல் அமைப்புச் செயலர்களாக உள்ளனர். கட்சியில் புதிதாக சேருபவர்களுக்கு அமைப்புச் செயலர் பதவி கொடுக்கப்படுவது வழக்கம். இது, கவனத்திற்காக கொடுக்கப்படும் பதவியே தவிர, எந்த அதிகாரமும் கிடையாது. பொதுக்குழு, தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பார்கள். இதேபோன்று, துணைப் பொதுச்செயலர் பதவி, பெயரளவில் மிகப்பெரிய பொறுப்பாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
நிர்வாகிகள் நியமனம், நீக்கம், கட்சி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான அனைத்து அதிகாரமும் பொதுச்செயலர் இடமே உள்ளது. இதனால் பதவி கிடைக்காத முன்னாள் மாவட்டச் செயலர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், சமீபத்தில் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலர்கள் சரியாக செயல்படாவிட்டால், மாவட்டச் செயலர் பதவியைப் பறித்து மீண்டும் முன்னாள் அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
