சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் ஒரு ரோபோ தெருவில் மண்டியிட்டு யாசகம் பெரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
Summary
சீனாவில், யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் மனித வடிவ ரோபோக்களை வீட்டு வேலைகள், தொழிற்சாலைகள், தீயணைப்பு, பேரிடர் மீட்பு போன்ற துறைகளில் பயன்படுத்துகிறது. செங்டூ உள்ளிட்ட நகரங்களில், மின்சார கட்டணம் செலுத்த பணம் இல்லை எனக் கூறி, கியூஆர் கோடு மூலம் யாசகம் கேட்கும் ரோபோவின் விளம்பர வீடியோ வைரலாகி, எதிர்கால பிச்சைக்காரர் வேலைகளையும் ரோபோக்கள் பறிக்குமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால், ரோபோக்களின் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது. தொழிற்சாலைகள் முதல் அன்றாடச் சேவைகள் வரை ரோபோக்கள் பெருமளவில் களமிறக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

Humanoid Robot
சீனாவின் ஹாங்சோ நகரை தலைமையிடமாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு ரோபோவின் ஆரம்ப விலை ரூ.16 லட்சமாக உள்ளது. இந்த ரோபோக்கள் பெரும்பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு உள்ளிட்ட பேரிடர் மீட்புப் பணிகளிலும் இவை ஈடுபடுத்தப்படுகின்றன.
யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் தனது ரோபோக்களை மக்களிடம் பிரபலப்படுத்த நூதன விளம்பரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்படி சீனாவின் சிச்சுவான் மாகாண தலைநகர் செங்டூவின் பிரதான சாலையில் யூனிட்ரீ நிறுவனத்தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கோரி வருகிறது. இந்த ரோபோ மண்டியிட்டு அமர்ந்து, கைகளை கூப்பி யாசகம் கோருகிறது. “மின்சார கட்டணத்தை செலுத்த பணம் இல்லை. எனவே யாசகம் அளித்து உதவுங்கள்” என்று ரோபா உருக்கமாக கூறுகிறது.
யாசகம் எடுக்கும் இந்த ரோபாவின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்டூ மட்டுமன்றி தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் சார்பில் இதே பாணியில் நூதன விளம்பரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ரோபோவை வெறும் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் கடினமான பணிகளைச் செய்யவும் பயன்படுத்த முடியும் என்று இதன் தயாரிப்பு நிறுவனமான Unitree Robotics தெரிவித்துள்ளது.

Unitree
இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் “எதிர்காலத்தில் பிச்சைக்காரர்களின் வேலையையும் AI மற்றும் ரோபோக்கள் பறித்துவிடும் போலிருக்கிறது” என்ற விவாதத்தையும், வேடிக்கையான மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளது.
