அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் இந்த கடல்சார் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீனா சமீபத்தில் அதிநவீன வடிவமைப்புடன் கூடிய புதிய வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனா, கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய செயற்கைக்கோள் படங்களில், அதிநவீன வடிவமைப்புடன் கூடிய புதிய வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சீனா தனது ஷாங்காய் மற்றும் ஹுலுடாவ் ஆகிய இரு வேறு கப்பல் கட்டும் தளங்களில் ஒரேநேரத்தில் இந்த புதிய ரக நீர்மூழ்கிகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக டைப் 095 மற்றும் ஷாங்காய் தளத்தில் கண்டறியப்பட்ட சாய்ல்-லெஸ் நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு ஆகியவை நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றன.

வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களின் மேல் பகுதியில் பெரிஸ்கோப், ரேடார் ஆன்டனாக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சாய்ல் எனப்படும் நீண்ட கோபுர அமைப்பு இருக்கும். ஆனால், சீனாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களில், இந்த அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டு அல்லது மிகச் சிறியதாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் இல்லாததால், நீருக்கு அடியில் செல்லும்போது ஏற்படும் உராய்வு மற்றும் நீரின் எதிர்ப்பு விசை பெருமளவு குறைகிறது. இது கப்பலின் வேகத்தையும், சுறுசுறுப்பான செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
அதேபோல், வழக்கமான அணுசக்தி நீர்மூழ்கிகளில் உள்ள அணு உலைகள், பெரிய மெக்கானிக்கல் ஷாஃப்ட் மூலமாக விசிறிகளை இயக்கும். இதனால் அதிக அதிர்வும் சத்தமும் உருவாகும். ஆனால், சீனாவின் புதிய டைப் 095 கப்பலில் ஷாஃப்ட்லெஸ் பம்ப்-ஜெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10,000 டன் எடையுள்ள இந்த டைப் 095 நீர்மூழ்கிக் கப்பல்கள், அமெரிக்காவின் அதிநவீன ‘வர்ஜீனியா’ ரக நீர்மூழ்கிகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள பிரத்யேகக் குழாய்கள் மூலம் ஒரே நேரத்தில் பல தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை ஏவ முடியும். அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் கணிப்புப்படி, தற்போது சீனா வசம் 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை 2027ஆம் ஆண்டிற்குள் 70 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் நேரடி வழிகாட்டுதலின்கீழ், அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் இந்த கடல்சார் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
