தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ’வாயத் திறங்க CM’ எனக் குறிப்பிடப்பட்ட கருப்புப் பட்டையை அணிந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியான வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், விசிக, ஐயூஎம்எல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். முதற்கட்டமாக, முதல்வர் விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர் பதவியேற்ற நிலையில், பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, கூட்டணி கட்சிகள் உட்பட 25 அமைச்சர் பதவியேற்றனர். அதன்படி, தமிழக அமைச்சரவை 35 என்ற முழுமையான எண்ணிக்கையை கொண்டிருக்கிறது. இந்தசூழலில் தான், தவெக அரசு பொறுப்பேற்றப்பிறகு, முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

விஜய்
அதேபோல், தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 1 மாதங்களை கடந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை புகார்கள் மற்றும் மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தொடர்பான பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க விருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தசூழலில் தான், இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ள திமுகவைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ‘வாயத் திறங்க சிஎம்’ என்ற வாசகங்களுடன் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து, “கதறல் கேட்குதா சிஎம், திரையில் நாயகன், தரையில் வில்லன், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே?” போன்ற பதாகைகளை ஏந்தி சட்டமன்ற வளாகத்தில் திமுகவினர் முழக்கங்களையும் எழுப்பியிருக்கின்றனர். இதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். தொடர்ந்து, 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கவுள்ளது.
