போர், பாதுகாப்பு விவாதங்களுக்கு நடுவே ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களின் சிகரெட், கால்பந்து, பிறந்தநாள் பரிசு போன்ற பேச்சுகள் வைரலாகியுள்ளன.
(G7) உச்சி மாநாட்டின் பெரும்பகுதியைத் தலைவர்கள் போர்கள், வர்த்தகப் பிரச்னைகள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் குறித்து விவாதிப்பதில் செலவிட்ட வேளையில், உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு நடுவே, கேமராக்களுக்கு பின்னால் தலைவர்களின் மறுபக்கத்தை இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

G7 summit
இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், அன்று காலை மெலோனி சிகரெட் ஏதேனும் பிடித்தாரா? என்று கேட்க அதற்குப் பதிலளித்த மெலோனி, மே 1-ஆம் தேதியே தான் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஃபிஃபா உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் நடத்துவதால், ஜெனீவா ஏரியைப் பார்த்தபடி மதிய உணவிற்காகக் கூடியிருந்த தலைவர்கள், சமீபத்திய கால்பந்துப் போட்டி முடிவுகள் குறித்து விவாதித்தனர். பிரான்சின் தேசிய அணிக்கு ஆதரவாக, “அலே லெஸ் ப்ளூஸ்!” என்றார் ஒருவர்.

Macron & Starmer
மற்றொரு தலைவர் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மெய்னின் சாம்பியன்ஸ் லீக் வெற்றியைப் பாராட்டினார். அதே நேரத்தில் ஸ்டார்மர், உலக சாம்பியனான ஸ்பெயினுக்கு எதிராக கேப் வெர்டே (Cape Verde) பெற்ற 0-0 டிரா குறித்துப் பேசினார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விவாதத்தை தற்காப்புக் கலைகள் பற்றி பேசியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரலாகும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் எடுப்பதற்கு முன்னதாகப் பிரதமரைச் சந்தித்த மெலோனி, உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் .அப்போது பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் பற்றிப் பேச, உடனடியாக புன்னகைத்த மெலோனி, ஆமாம் இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகவும் பிரபலமானவர்கள் என்று கிண்டலாக பேசியுள்ளார்.

Trump & Macron
தலைவர்கள் மதிய உணவிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது கைக்கடிகாரத்தை மறந்து மேஜையிலேயே விட்டுச் சென்றதை கனடா பிரதமர் மார்க் கார்னி கவனித்தார். அவர் கடிகாரத்தை இங்கேயே விட்டுச் சென்றுவிட்டார், அது நம்மிடம் உள்ளது என்று மார்க் கார்னி கிண்டலாகக் கூற, உடனே அருகில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் சென்றுவிட்டால் அதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்; என்னிடம் கொடுங்கள்” என்று கூறி அங்கிருந்தோரைச் சிரிக்க வைத்தார்.
அடுத்த ஆண்டு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரான்ஸ் நடத்தவிருக்கும் சைக்கிள் ஓட்டுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை விளம்பரப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஜி7 தலைவருக்கும் மேக்ரான் சைக்கிளை பரிசளித்தார். கோல்ஃப் விளையாட்டைத் தவிர வேறு எந்த உடற்பயிற்சியையும் தவிர்ப்பது குறித்து டிரம்ப் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசி வருவதால், இந்தப் பரிசு கவனத்தை ஈர்த்தது.

Merz & Trump
ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், டிரம்பிற்கு ஜெர்மன் தேசிய கால்பந்து அணியின் ஜெர்சியைப் பரிசளித்தார். அதில் டிரம்பின் பெயரும், அவர் தற்போது 47-வது அமெரிக்க அதிபராகப் பதவி வகிப்பதைக் குறிக்கும் வகையில் 47 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தது.
டிரம்ப் அந்தச் சட்டையுடன் புகைப்படக்காரர்களுக்காக போஸ் கொடுத்தார். பின்னர் மெர்ஸ், “எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒரே அணியில் இருக்கிறோம்” என்ற தலைப்புடன் அந்தப் படத்தை இணையத்தில் பதிவிட்டார்.
