டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனான சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
Summary
சூர்யகுமார் யாதவின் வயது, பேட்டிங் ஃபார்மில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 2028 டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இருந்து அவர் விலகி, ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கேப்டனாக உயர்த்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து, அயர்லாந்து சுற்றுப்பயணங்களுக்கும் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டிற்குமான அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமளிக்கப்பட்டது முக்கிய அம்சமாகும்.
ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பை, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2026 டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து 2 கோப்பைகளை இந்திய அணி வென்றபிறகு, 2028 டி20 உலகக்கோப்பைக்காக பிசிசிஐ தற்போதே தயாராகியுள்ளது. அதன் ஒருபகுதியாக டி20 கேப்டனாக பல தொடர் வெற்றிகளை குவித்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

sky
சூர்யகுமார் யாதவிற்கு 2028 டி20 உலகக்கோப்பையில் 38 வயது நெருங்கிவிடும் நிலையில், இந்த முடிவுக்கு இந்திய தேர்வுக்குழு சென்றுள்ளது. அதற்கும்மேல் கேப்டனாக சூர்யகுமார் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேனாக சர்வதேச டி20 கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் படுமோசமாகவே செயல்பட்டு வருகிறார். அவருடைய ஃபார்மும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.

shreyas iyer pbks captain
இந்தசூழலில் தான் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான டி20 அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பிசிசிஐ அறிவித்துள்ளது.
15 வயது சூர்யவன்ஷிக்கு இடம்..
பிசிசிஐ, இங்கிலாந்து, அயர்லாந்து சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியையும், ஜப்பானில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய டி20 அணியையும் அறிவித்துள்ளது. இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரின்ஸ் யாதவ், முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் 776 ரன்கள் குவித்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு டி20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சர்வதேச டி20 அறிமுகத்தை சூர்யவன்ஷி பெற்றால் இளம் வயதில் சர்வதேச அறிமுகம் பெற்ற சச்சினின் சாதனையை சூர்யவன்ஷி முறியடிப்பார். சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்றார்.
