இதுவரை நான் ஒரு இசையமைப்பாளரை மனதில் வைத்து கதை எழுதியதில்லை. ஆனால் `மஞ்சணத்தி’ எழுதும்போதே ராஜா சார் என நினைத்துதான் எழுதினேன்.
Summary
இசைஞானி இளையராஜாவின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். தனது ஆறாவது படமான ‘மஞ்சணத்தி’க்கு இளையராஜா இசையமைப்பது வாழ்க்கையின் முக்கிய தருணம் என கூறிய அவர், இந்த படத்தை ராஜாவுக்கு அளிக்கும் மரியாதையாகக் கருதுவதாகவும், இதற்காகவே திரைக்கதை எழுதும் தருணத்தை காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் 83வது பிறந்தநாள் இன்று. எனவே பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் `மஞ்சணத்தி’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல நேரில் சென்றார் மாரி. அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது “இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். இன்று அவருக்கு 83வது வயது. இந்த 83வது வயதில் அவருடன் இணைந்து என்னுடைய ஆறாவது படத்தை செய்கிறேன். இது என் வாழ்வின் முக்கியமான தருணம். சமீபத்தில் நிகழ்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, கொண்டாட வந்து வாழ்த்து கூறினேன்.

Manjanathi
என் சினிமா பயணம் துவங்கிய காலத்திலிருந்து, அல்லது அதற்கும் முன்பிருந்தே என் அருகிலேயே இருந்தது யார் என்றால் அது இளையராஜா சார் தான். எல்லோரோடும் அவர் இருந்திருப்பார். எனவே ராஜா சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது பெரிய ஏக்கமாகவே இருந்தது. அதற்கு சரியான தருணம் அமைய வேண்டும், நானும் சினிமாவை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என திரைக்கதை எழுத வேண்டும், அவருடன் பணியாற்றும் காலம் முக்கியமான காலமாக இருக்க வேண்டும் என காத்திருந்தேன்.
அவர் என்னுடைய படங்கள் மீதும் வேலை மீதும் நல்ல மரியாதை வைத்திருக்கிறார். அவர் என்னை வரவேற்ற விதமும், எனக்காக வேலை செய்யும் விதமும் என்னுடன் பழகும் விதமும், ஒரு பிள்ளை போல என்னை நடத்துவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையாக `மஞ்சணத்தி’ படம் இருக்கும். இதுவரை நான் ஒரு இசையமைப்பாளரை மனதில் வைத்து கதை எழுதியதில்லை. ஆனால் `மஞ்சணத்தி’ எழுதும்போதே ராஜா சார் என நினைத்துதான் எழுதினேன்.
`மஞ்சணத்தி’ வாழை படத்தின் இன்னொரு வடிவம் என்று சொல்லலாம். என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வெவ்வேறு பெயரில் எடுக்க ஆசை. எனவே வாழையின் இன்னொரு பகுதியாக மஞ்சணத்தி இருக்கும். ஆனால் வாழை பார்ட் 2 இல்லை.” என்றார்.
