முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட 35 அமைச்சர்களில் கலிதா மாஜியும் ஒருவர். இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 41ஆக விரிவடைந்துள்ளது.
Summary
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில், ஆஸ்கிராம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கலிதா மாஜி மாநில அமைச்சராக உயர்ந்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஆவுஸ்கிராம் தொகுதியில் சமீபத்தில் வெற்றி பெற்று பாஜக சட்டமன்ற உறுப்பினரான கலிதா மாஜியையும் சேர்த்து, மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 37 வயதான கலிதா மாஜி என்பவரும் திங்களன்று மாநில அமைச்சராகப் (MoS) பதவியேற்றுள்ளார். வீட்டுவேலைகளை செய்துகொடுக்கும் பணியில் இருந்த பெண் அமைச்சராகியுள்ளார். இவரது கணவர் பிளம்பராக பணிபுரிந்துவரும் நிலையில் சாதாரண வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

Suvendu Adhikari & Kalita Majhi
அமைச்சராக பதவியேற்ற பின் பேசிய கலிதா மாஜி, தற்போதுள்ள எளிய வாழ்க்கையே தொடரும் எனக்கூறினார். ஏழை எளிய மக்களின் பிரச்சினை தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் எனவே அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்ற தன்னால் முடியும் என்றும் கலிதா மாஜி தெரிவித்தார்.
மேலும் நான் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, எனது கவனம் முழுவதும் எனது சொந்தத் தொகுதியின் மீது மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பும் என் தோள்களில் சேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
யார் இந்த கலிதா மாஜி?
குஸ்காரா நகராட்சியில் வசிப்பவர் கலிதா மாஜி. வீடுகளுக்குச் சென்று அங்குள்ள வேலைகளைச் செய்யும் பணியாளராக இருந்த இவர், மாதந்தோறும் 2,500 ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான், ஆஸ்கிராம் தொகுதியில், பாஜக அவரை வேட்பாளராகக் களமிறக்கியது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. கலிதா மாஜி 1,07,692 வாக்குகள் பெற்று, ஷ்யாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Kalita Majhi
முன்னதாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் திரிணாமூல் காங்கிரஸின் அபதானந்த தண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், அவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்தி அழகு பார்த்தது பாஜக. அதன் முடிவு, இன்று உள்ளூர் மட்டுமல்ல, உலகத்துக்கே புகழைத் தேடித் தந்திருக்கிறது. இது, அடிமட்டத் தொண்டர்களுக்கும் கட்சி அளிக்கும் ஆதரவையும் நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
