மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது. தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திடமான நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?

மேகதாது அணை – எடப்பாடி பழனிசாமி
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசுதான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா?
காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதுகடும் கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.

டி.கே.சிவகுமார்பி.டி.ஐ.
கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டைஅறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ”மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.
