தமிழக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே பட்டியல் வகுப்பினர் இருந்தும், தடுப்புக் காவல் கைதிகளில் 31.2% பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் என தரவுகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டுக் சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1,117 தடுப்புக் காவல் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்; இது நாட்டிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். இவர்களில் 1,074 பேர் ஆண்களும், 43 பேர் பெண்களும் ஆவர். மேலும், இவர்களில் 528 பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகிறது.

Trial prisnors
இந்த சூழலில்தான், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே பட்டியல் வகுப்பினர் இருந்தபோதிலும், தடுப்புக் காவல் கைதிகளில் 31.2 சதவீதத்தினர் பட்டியல் வகுப்பினர்களாக இருக்கிறார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது. தடுப்புக் காவல் கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்வியறிவற்றவர்களாகவோ (351 பேர்) அல்லது 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர்களாகவோ (379 பேர்) இருக்கிறார்கள் என்றும் அந்த தரவு கூறுகிறது. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினர் மீது தடுப்புக் காவல் முறை ஏற்படுத்தும் தாக்கத்தை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தடுப்புக் காவல் சட்டம் (Preventive Detention Act) என்பது, ஒருவர் குற்றம் செய்த பிறகு தண்டனை வழங்குவதற்காகக் கைது செய்யப்படாமல், அவர் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பொது அமைதி மற்றும் பாதுகாப்பைக் கருதி, விசாரணை இன்றி முன்கூட்டியே சிறையில் அடைக்கும் ஒரு சட்ட நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
