மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
45 நாட்களில் எல்லை வேலிகளை எல்லைப் பாதுகாப்புப் படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கும்” என தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட (புகார் காரணமாக ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது) மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், “45 நாட்களில் எல்லை வேலிகளை எல்லைப் பாதுகாப்புப் படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கும்” என தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Suvendu Adhikari
முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, இந்தியா – வங்கதேசம் எல்லையில் வேலி அமைப்பது ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இன்று நடைபெற்ற எங்களின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, அந்த நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை இன்று தொடங்கி, அடுத்த 45 நாட்களுக்குள் நிறைவடையும். இது முடிந்தவுடன், எல்லைப் பாதுகாப்புப் படை எல்லை வேலி அமைக்கும் பணியை முடிக்கும், மேலும் சட்டவிரோத ஊடுருவல் பிரச்னையும் குறுகிய காலத்திற்குள் தீர்க்கப்படும்” என்றார். இது, வங்கதேசத்தில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவலைக் கையாள்வதை மையமாகக் கொண்ட பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும்.
முன்னதாக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதாகவும், அதை திரிணாமுல் காங்கிரஸ் அனுமதிப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது. தவிர, இது முக்கியப் பிரச்னையாக அந்த இருகட்சிகளிடமும் உருவெடுத்தது. மேலும், தேர்தல் பிரசாரத்தினபோது, பாஜக ஆட்சிக்கு வந்தால், எல்லை வேலி அமைக்கத் தேவையான அனைத்து நிலங்களையும் 45 நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைத்து விடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார். இந்த நிலையில்தான், முதல்வர் சுவேந்து அதிகாரி அதற்கான நடவடிக்கையை இன்று எடுத்துள்ளார்.

மேற்கு வங்காளம், அண்டை நாடான வங்கதேசத்துடன் 4,097 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 3,240 கி.மீ. தூரத்திற்கு ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 175 கி.மீ. கடினமான நிலப்பரப்பு உட்பட, சுமார் 850 கி.மீ. தூரத்திற்கு இன்னும் வேலி அமைக்கப்படவில்லை. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நிலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுத்தியதாலேயே முழுமையாக வேலி அமைக்கப்படவில்லை என பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது.
