விஜய் எனும் சூறாவளியில் முதல்வர்வ் ஸ்டாலினே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டத்தின் சிலுவம்பாளையத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் 1954இல் பிறந்தவர் கே.பழனிசாமி. 1974இல் ஒரு சாதாரணத் தொண்டராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989இல் முதன்முறையாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். பின்பு 1998இல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார்.

EPS’s Campaign bus
2016இல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் குழப்பம் நிலவியது. 2017இல் யாரும் எதிர்பாராத சூழலில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றபோது, “இவர் சில மாதங்கள்கூட நீடிக்க மாட்டார்” என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், புயல், கொரோனா பேரிடர் என அனைத்தையும் திறம்படக் கையாண்டு, நான்கரை ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய 7.5 சதவீத இடஒதுக்கீடு, விவசாயிகளின் நலன் காக்க காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, தமிழ்நாடு பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் சிபிஎஸ்ஈக்கு இணையாக மாற்றியது என இவரது சாதனைகள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

EPS
அக்டோபர் 2020இல் பொது விவகார மையத்தால் வெளியிடப்பட்ட பொது விவகாரக் குறியீட்டின்படி, சிறந்த ஆட்சி செய்யும் 5 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின்போது எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்யாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். 2021இல் ஆட்சியை கே.பழனிசாமி இழந்தாலும், சோர்ந்துவிடவில்லை. கட்சியைத் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஒற்றைத் தலைமையாக உருவெடுத்தார்.
2026 தேர்தலில், ஆளுங்கட்சியின் பலம், திமுக உருவாக்கிய வலுவான கூட்டணி, புதிய சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜயின் அரசியல் வருகை எனப் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டார். “விவசாயிக்குத்தான் விவசாயியின் கஷ்டம் தெரியும்” என்ற ஒற்றை முழக்கத்தோடு மக்களைச் சந்தித்தவர், தனது செல்வாக்கையும், கட்சியின் பலத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

eps
அதிமுக சார்பில் ஒரே நட்சத்திர பிரசாரகராக தமிழ்நாட்டின் அத்தனை தொகுதிகளுக்கும் சென்ற, எடப்பாடி கே. பழனிசாமியின் அசாத்திய உழைப்பு, மீண்டும் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுகவுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
