பசுவின் கோமியம் மற்றும் சாணம் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யத்தை குடித்தால் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என பிரபல கங்கோத்ரி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,100 மீட்டர் உயரத்தில் இமயமலையில் பிரபலம் வாய்ந்த கங்கோத்ரி கோயில் அமைந்துள்ளது. தேவலோகத்தில் இருந்து கங்கை பூமிக்கு இறங்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேபோல இந்தக் கோயில் புகழ்பெற்ற சார் தாம் யாத்திரையின் நான்கு தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிலையில், இந்த கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான ‘சார் தாம் யாத்திரை’ (Char Dham Yatra) தொடங்கியுள்ள நிலையில், கங்கோத்ரி கோயில் நிர்வாகக் குழு கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் பஞ்சகவ்யம்(Panchgavya) என்ற புனித நீரை அருந்துவது கட்டாயம் என்ற ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர் மற்றும் பசுவின் சாணம் ஆகியவற்றை கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் இது கங்கை நீரோடு கலந்து பக்தர்களுக்கு குடிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் தர்மேந்திர செம்வால், ”கோயிலுக்குள் நுழையும் நபர் சனாதன தர்மத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவரா என்பதை உறுதிப்படுத்த இந்த முறை உதவும்” என்று கூறியுள்ளார். மேலும், இந்து அல்லாதவர்கள் அல்லது இந்து வேடத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுக்க வருபவர்களைக் கண்டறிய இது ஒரு சோதனைபோலச் செயல்படும் என்றும், அனைத்து இந்துக்களும் இதனை அருந்துவதால் இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை” என்றும் கூறியுள்ளார்.

வடமாநிலங்களில் மட்டுமே பஞ்சகவ்யம் குடிக்கப் பயன்படுத்தபடுகிறது. தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் பஞ்சகவ்யம் தீர்த்தமாகத் தெளிக்கும் பழக்கமே உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
