தேர்தல் தொடர்பான கள விவரங்களைக் கட்சித் தலைவர்கள் கேட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல், தேர்தல் தொடர்பான விவரங்களை தவெக தலைவர் விஜய் கேட்டறிந்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று, மாநிலம் முழுவதும் சராசரியாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான கள விவரங்களைக் கட்சித் தலைவர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சிவசங்கர், ஆவடி நாசர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் -ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தேர்தல் தொடர்பான விவரங்களை தவெக தலைவர் விஜய் கேட்டறிந்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை விஜய் சந்தித்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சந்திப்பில், வாக்குப்பதிவு விவரம், மக்கள் என்ன நினைக்கிறார்கள், தவெகவுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள், நிர்வாகிகள் எப்படி பணியாற்றினார்கள் போன்ற விவரங்களை விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
