தொகுதி மறுவரையறை திட்டத்தால் எந்த மாநிலத்திற்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மாறாது என்றும், எந்த பாகுபாடும் இருக்காது என்றும் உறுதி தருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Summary
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்து மக்களவையில் நடந்த விவாதத்தில், எந்த மாநிலத்திற்கும் அநீதி, பாகுபாடு இருக்காது என பிரதமர் மோடி உறுதி அளித்தார். தமிழில் கூடச் சத்தியம் செய்யத் தயார் என கூறிய அவர், மகளிர் முன்னேற்ற முயற்சிக்கு அரசியல் நிறம் பூச வேண்டாம், நாடு முழுவதையும் ஒரே கோணத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதம் அவையில் நடைபெற்றது. இதில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் தென் மாநிலங்களில் தொகுதிகளின் விகிதங்களில் மாறுதல் ஏற்படும், தங்களுக்கு தொகுதிகள் குறையும் என குற்றஞ்சாட்டினர்.

pm modi
இந்தசூழலில் இவ்விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் பாகுபாடு காட்டப்படாது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக சத்தியம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்துவதாகவும் இதை விட பொருத்தமான வார்த்தை தமிழில்இருந்தால் அதைக்கூட கூறத் தயார் என்றும் பிரதமர் கூறினார். மகளிர் முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பிற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் பிரதமர் பேசினார். நாம் அனைவரும் ஒரே நாடு என்ற கோணத்தில் சிந்திக்கவேண்டும் என்றும் ஒரு பகுதியின் நலனை மட்டும் பார்க்கக்கூடாது என்றும் பிரதமர் பேசினார்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால் அரசியல் ஆதாயம் அவர்களுக்கே கிடைக்கும் என பிரதமர் தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேறினால் கிடைக்கும் பெருமையை எதிர்க்கட்சிகளுக்கே விட்டுத்தர தயாராக உள்ளதாகவும் பிரதமர் பேசினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது காலத்தின் கட்டாயம் எனப் பேசிய பிரதமர் ஏராளமான திறமைசாலி பெண்கள் அரசியல் அதிகாரம் பெற காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தவர்களை ஏற்கெனவே பெண்கள் நிராகரித்துவிட்டதாகவும் பிரதமர் பேசியள்ளார்.
