பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது `இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?’ என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம்.
Summary
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ படத்தின் நன்றி விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மூன்று–நான்கு ஆண்டுகள் நீண்ட தயாரிப்பு, ஐந்து முறை மாற்றிய ரிலீஸ் தேதியால் எதிர்பார்ப்பு குறையும் என்ற அச்சம் இருந்தும், படம் வெளியானபின் கிடைத்த மிகப்பெரிய ஓபனிங், மக்களின் அன்பு குறித்து நன்றியுடன் பேசினார். தடைகளை தாண்டிய வெற்றிக்கு ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK’. இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன் “இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2023 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போதே இந்தப் படம் பற்றி வெளியில் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. ஐந்து முறை ரிலீஸ் தேதி போட்டிருக்கிறோம். கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.

LIK
பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக் குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது `இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?’ என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவ், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக்கி இருக்க முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங், இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
