தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் திறமைகளை சரியாக கண்டுபிடித்து பயன்படுத்தாததே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய குறை என முன்னாள் சிஎஸ்கே வீரர் எல்.பாலாஜி குற்றம்சாட்டினார்.
Summary
தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சிஎஸ்கே வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்களைப் பற்றி பத்ரிநாத் யூடியூப் சேனலில் எல்.பாலாஜி பேசினார். 17 ஆண்டுகளாக ஒரே டெம்ப்ளேட்டில் பயிற்சி அளிக்கும் ஸ்டீபன் ஃபிளெமிங், காலத்துக்கு ஏற்றபடி தன்னை அப்டேட் செய்யவில்லை என்றும், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட உள்ளூர் திறமைகளை சரியாக கண்டுபிடித்து பயன்படுத்தாததே அணியின் பெரிய குறை என அவர் குற்றம்சாட்டினார்.
தோனி தலைமையில் 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றிருந்தாலும், 2023-க்கு பிறகு கேப்டன்சியிலிருந்து தோனி விலகிய பிறகு சிஎஸ்கே படுமோசமாக செயல்பட்டு வருகிறது.
இந்தசூழலில் தான் தோனியால் தான் சிஎஸ்கே 5 முறை கோப்பை வென்றது என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் கோச்சாக இருந்தாலும் அவர் நல்ல கோச் கிடையாது என்றும், ஐபிஎல்லை தவிர அவரால் வேறு எங்கேயும் கோப்பை வெல்லமுடியவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

தோனி – ஃபிளெமிங் – பதானி
இந்தசூழலில் பத்ரிநாத் யூடியூப் சேனலில் உரையாடிய எல்.பாலாஜி மற்றும் பத்ரிநாத் இருவரும் சிஎஸ்கே அணியில் இருக்கும் குறைகளையும், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிடம் உள்ள பிரச்னையையும் பேசினார். அப்போது தமிழ்நாடு வீரர்களை சிஎஸ்கே சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என எல்.பாலாஜி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பத்ரிநாத் உடனான உரையாடலில் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் லட்சுமிபதி பாலாஜி, “ஸ்டீஃபன் பிளெமிங் சிஎஸ்கேவில் ஒரு வீரராக இருந்தபோதும், பின்னர் பயிற்சியாளராக மாறியபோதும் நான் உடன் விளையாடி இருக்கிறேன். ஒரு அணியின் பயிற்சியாளராக நீங்கள் 17 வருடம் இருக்கும்போது, அந்த கேம் என்ன டிமாண்ட் பண்ணுதோ அதற்கு தகுந்தார்போல நீங்க உங்களை அப்டேட் பண்ணிக்கணும். தற்போது கிரிக்கெட் எப்படி மாறி இருக்கிறது, அதை சரிசெய்ய எந்தமாதிரி திறமையான வீரர்கள் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக 10 வருடத்திற்கு முன்பு வைத்திருந்த அதே டெம்ப்ளேட்டை தற்போதும் வைத்திருந்தால் அது கைக்கொடுக்காது.
ஃபிளெமிங்கிடம் நாம் பார்ப்பது அவரிடம் ஒரே மாதிரியான பயிற்சி முறை மட்டுமே உள்ளது. தோனி இருக்கும்போது களத்தில் அவர் பார்த்துக்கொள்வார், ஆனால் களத்திற்கு வெளியே அணியின் 25 வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பயிற்சியாளர் உடையது. எங்கிருந்து திறமையாளர்களை நீங்கள் தேந்தெடுப்பீர்கள், லோக்கல் திறமையான வீரர்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர்.

எல்.பாலாஜி
முன்பு விபி சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்து என்னையும், பத்ரிநாத்தையும் முதன்மை தேர்வாக வைத்திருந்தார். பின்னர் சொந்தமண்ணில் அவ்வளவு தான் திறமையா என பார்த்து, அடுத்த வீரர்களாக முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பிருந்த தமிழக வீரர்களை வெளியேற்றாமல், அடுத்தடுத்த தமிழ்நாடு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது அது நடப்பதில்லை, அதை நீங்கள் செய்தாகவேண்டும். அது தமிழ்நாடு மட்டும் தான் என இல்லாமல், விதர்பா, பஞ்சாப் என எங்கிருந்து வேண்டுமானாலும் உள்ளூர் திறமைகளை அணியில் சேர்க்க வேண்டும். ஆனால் கடந்த 10-12 ஆண்டுகளில் பல உள்ளூர் திறமைகளை தவறவிட்டுவிட்டனர். தொடர்ந்து ஒரே டெம்ப்ளேட்டில் சிஎஸ்கே செல்வது, தற்போதுள்ள டிமாண்ட்டிற்கு ஒத்துவரவில்லை.
பயிற்சியாளர்கள் தான் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும், உங்களுடைய வீரருக்கு காயம் ஏற்பட்டால் என்னசெய்யவேண்டும் என தயாராக இருக்கவேண்டும். ஒரு வீரர் இல்லையென்றால் உள்ளூர் திறமைகளை எப்படி உடனே களத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற முன் தயாரிப்பு இருக்கவேண்டும்” என பேசியுள்ளார்.
