தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடும் சூழலில், அவரது சொத்து மதிப்பு விவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.
Summary
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தனது வேட்புமனுவில் தன்னிடம் சொந்த வீடு எதுவும் இல்லை என்றும், வங்கி கடன் 5.11 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது தேர்தலுக்கு தயாராகிவிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து இதர மாநிலச் சட்டசபை வாக்கு எண்ணிக்கையுடன் வரும் மே 4ம் தேதி தமிழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
சீமான்
இந்த முறை தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் வழக்கம் போலக் களத்தில் உள்ளன. இது தவிர விஜய்யின் தவெகவும் புதிதாகத் தேர்தல் களத்தில் குதித்து தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கிடையே வேட்புமனு தாக்கல் தொடங்கிய சூழலில், சீமான் முதல் நாளே வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே காரைக்குடியில் போட்டியிடும் நாதக தலைவர் சீமானின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சீமான் தன்னிடம் ரூ.39.8 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், 150 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மனைவி கயல்விழி பெயரில் மூன்று கோடியே 44 லட்சம் அசையும் சொத்தும், 200 பவுன் அதாவது 1600 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் ரொக்கமாக ரூ.50,000 & மனைவியிடம் ரூ.35,000 உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் உள்ள ரூ.39.8 லட்சம் சொத்துகள் அசையும் சொத்துகள் எனவும் தன்னிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு வங்கியில் 5,11,000 ரூபாய் கடன் இருப்பதாகவும், மனைவி கயல்விழி பெயரில் 18,39,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், சீமான் பெயரில் சொந்தமாக வீடு இல்லை என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமான் வேட்புமனுத் தாக்குதல்
சீமான் காரைக்குடியில் போட்டியிடும் சூழலில், அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. அங்குப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் அமமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு தேர்போகி வி. பாண்டி போட்டியிடுகிறார். அதேபோல விஜய்யின் தவெக சார்பில் டி.கே.பிரபு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சீமானை பொறுத்தவரை அவர் கடந்த 2016 மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 2016ல் அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் அங்கும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
