
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் இந்தியா முழுவதும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் போட்டி முடிவடைந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாக மாறியுள்ளது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒரு தரப்பும், இந்திய அணி செய்ததுதான் சரி என ஒரு தரப்பும் கூறி வருகிறது.
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி UAE-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அதிரடியான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும், அப்ரிடி 33 ரன்களும் எடுத்தனர். பிற வீரர்கள் இந்திய அணியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நடையைக் கட்டினர்.
ஆசியக் கோப்பை 2025
அதிகபட்சமாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர், 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி இலக்கை தாண்ட வைத்தார். இந்த போட்டி முடிந்த பின், இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
போட்டி முடிந்ததும் பேட்டிங் முடித்த சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேவும் கிரீசிலிருந்து பெவிலியன் நோக்கி திரும்பினர். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு கை கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள்ளாக இருவரும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வீரர்களும் பயிற்சியாளரான மைக் ஹெசன் ஆகியோரும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். ஆனாலும் அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
கை குலுக்க மறுப்பு
பின்னர் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்த வெற்றியை நமது ஆயுதப்படை வீரர்களுக்கே அர்ப்பணிக்கிறோம்” எனத் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பாகிஸ்தானுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
முன்னதாக பாகிஸ்தானுடன் போட்டி நடத்துவதை பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், “பாலாசாஹேப் தாக்கரே இருந்திருந்தால் இந்தப் போட்டி நடந்திருக்காது” எனக் கூறினார். அதேபோல் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஷுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா திவேதியும் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விவாதம்
இந்த நிலையில் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு, பாகிஸ்தான் வீரர்களையும் இந்திய அணி வீரர்கள் பழி வாங்கியதாக சமூக வலைதளங்களில் ‘No Handshake’ என்ற ஹேஷ்டேக் எக்ஸில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதே நேரத்தில் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும், இந்திய வீரர்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் விளையாடவில்லை என சிலர் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடி சரியானதுதான் என ஆதரவும் பெருகி வருகிறது.