நெல்லையில் சகோதரி அடிக்கடி செல்போன் பார்த்ததை தம்பி கண்டித்ததை அடுத்து ஏற்பட்ட வாய் தகறாரில் தம்பியே அக்காவை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
நெல்லை மாவட்ட சுத்தமல்லி மேல கிராமத்தில், செல்போன் பார்த்ததை காரணம் காட்டி சகோதரன் முத்துகிருஷ்ணன், அக்கா ராமலட்சுமியை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கால்நடைகளுக்கு உணவு வைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையாக மாற, போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துகிருஷ்ணனை கைது செய்து, உண்மையான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி (வயது 23) என்ற மகளும், ராகுல் (22) மற்றும் முத்து கிருஷ்ணன் (21) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆடு மாடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார். அவருடைய மகள் ராமலக்ஷ்மி கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக இருந்து வரும் நிலையில், முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் கேசியராக பணிபுரிந்து வருகிறார்.

திருநெல்வேலி
இந்த நிலையில் நேற்று இரவு ராமலட்சுமி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார், அவரது பெற்றோர் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ராமலட்சுமிக்கும் அவரது சகோதரர் முத்துகிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் ராமலட்சுமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார்.
தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை மீட்டு நல்ல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் ராமலக்ஷ்மி அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதை அவரது சகோதரர் கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
