
தீபாவளிக்கு போனஸ் கிடைச்சா எங்களுடைய சிறு சிறு ஆசைகளை நிறைவேத்திப்போம்.. எங்க குழந்தைகளோட ஆசைகளையும் நிறைவேற்றுவோம்.
நாட்டில் பல்வேறு வணிக நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை புரியும் பணியாளர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஒரு வழக்கம் நல்ல வேலைக்கான வெகுமதியாகவும், நிறுவனர்கள் புதிய ஊழியர்களை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது. போனஸ்கள் என்பது எதிர்பார்த்ததை விட அதிகமான இனிமையான தருணமாக நடுத்தர மக்களுக்கு இருக்கும்.
நடுத்தர வர்க்கத்தினர் இந்த போனசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் சிறு சிறு ஆசைகள் அதாவது, குழந்தைகளுக்கு பட்டாசு பூத்தாடைகள் இனிப்புகளை வாங்கி கொடுத்து மகிழ்விக்கலாம் என்றும், சிறு சிறு வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடலாம் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். தீபாவளி பண்டிகை போன்ற நாட்களில் மாத வருமானத்தை தாண்டி கூடுதலாக கிடைக்கும் இந்த போனஸ் தொகை நடுத்தர குடும்பங்களுக்கு பெரிதும் கை கொடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
வேலை பார்க்கும் அனைத்து நிறுவனங்களும் போனஸ் வழங்குகிறார்களா என்று கேட்டால் கிடையாது, ஒரு சில நிறுவனங்கள் 10, 15 வருடங்கள் வேலை புரியும் பணியாளர்களுக்கு எந்த ஒரு ஊக்க தொகையும் வழங்கபடுவதில்லை. இந்த போனஸ் தொகை என்பது ஊழியர்களை ஊக்குபடுத்துவதற்காகவும், சிறு சிறு வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். முதலாளிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களுக்கு போனஸ் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் கோரிக்கையாகவும் இது இருக்கின்றது. ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தொகை பெரும்பாலும் வீட்டு வாடகை வீட்டு செலவிற்கு சரியாக போய்விடும். இப்படி இருக்கையில் எப்படி இவர்கள் மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவார்கள்.
எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஊதியத்துடன் போனஸ் தொகையும் வழங்கி மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு செய்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
தீபாவளி போனஸ் குறித்து பொதுமக்கள் கருத்து : பொதுவாக அனைத்து மக்களாலும் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளிதான். மற்ற பண்டிகையை போல அல்லாமல் தீபாவளியின் போது அதிக செலவு ஏற்படும். ஏனெனில் தீபாவளி பண்டிகையில் புத்தாடை, ஸ்வீட், பலகாரம், பட்டாசு என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செலவு உண்டு.
இந்த செலவு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. ஆனால் அதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு பார்த்தால், நடுத்தர வர்க்கத்தினர் கொஞ்சம் ஆடித்தான் போகின்றனர். இருப்பினும் செலவை சமாளிக்க மிடில்கிளாஸ் மக்களுக்கு. பெரிதும் கைகொடுப்பது தீபாவளி போனஸ் தான். இதற்காக மாச கணக்கில் காத்து இருந்து, இதற்காக பட்ஜெட் போட்டு, விரும்பியதை தினம் ஒரு தரம் நினைத்து பார்த்து, இறுதியில் போனஸ் கைக்கு வந்த உடன் சிறிய பொருளோ, பெரிய பொருளோ, தங்கமோ, பித்தளையோ போனஸ் பணத்தில் இருந்து வாங்கும் போது கிடைக்கிற சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது மிடில் கிளாஸ் மக்களுக்கு.
எனவே இந்த போனஸ் பழக்கத்தை சிறு தொழிலாளர்கள் முதல் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கும் ஒரு சிறப்பு அம்சமாகவே உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே இருப்பதை கொண்டு அனைவரும் சிறப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் மக்களே !